அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூன்று தலைவர்களும் அடுத்த வாரம் சீனாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் நேரடியாகச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்த நிகழ்வு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, நவம்பர் 19-ம் தேதி இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதில் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது மற்றும் உலக நாடுகளின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. உலகளவில் அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கான புதிய ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட கடைசி ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்', கடந்த பிப்ரவரி மாதத்துடன் காலாவதியானது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், சீனாவையும் இணைத்து புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.
Advertisement
ஆனால், தனது அணு ஆயுத இருப்பை தொடர்ந்து அதிகரித்து வரும் சீனா, இந்த ஒப்பந்தத்தில் இணைய விருப்பம் காட்டவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, ஈரான் தொடர்பான விவகாரங்களும் மூன்று தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ளன. குறிப்பாக, ஈரான் தொடர்பான போர் சூழல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு குறித்த அம்சங்கள் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், ரஷியா-உக்ரைன் போர் குறித்து இந்தச் சந்திப்பில் பேசும் திட்டம் டிரம்பிடம் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரம்பின் சீனப் பயணத்தில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கும் பங்கேற்க உள்ளார். சீனாவில் அவருக்கு இருக்கும் தொழில் சார்ந்த நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பயணத்தில் அவர் இணைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூன்று நாட்டு தலைவர்களும் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மஸ்க் கலந்துகொள்ள மாட்டார். உலகின் முக்கிய அணு ஆயுத வல்லரசுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் சந்தித்துப் பேசவிருப்பது, சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.