ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக்கர்’திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது. உலகளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட டாம் குரூஸ், குறிப்பாக சாகச மற்றும் அதிரடி காட்சிகளில் தனது தனித்துவமான நடிப்பால் பிரபலமானவர். அவர் நடிப்பில் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 63 வயதிலும் பல ஆபத்தான காட்சிகளில் டூப் பயன்படுத்தாமல் நடிப்பது அவரது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது. 1996-ம் ஆண்டு டாம் குரூஸ் ரகசிய ஏஜென்டாக நடித்த முதல் 'மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக வெளியான பல பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தத் தொடரின் 8-வது படமான 'மிஷன் இம்பாசிபிள் – தி பைனல் ரெக்கனிங்’திரைப்படமும் சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
Advertisement
இதையடுத்து, ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜான்ட்ரோ இனாரித்து இயக்கத்தில் டாம் குரூஸ் நடித்துள்ள புதிய படம் ‘டிக்கர்’. இதில் அவர் வயதான முதலீட்டாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிரடி படங்களில் அதிகம் நடித்து வந்த டாம் குரூஸ், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்சன் அல்லாத திரைப்படம் ஒன்றில் நடித்திருப்பது இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 'டிக்கர்’ திரைப்படத்தின் பைனல் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படத்தை வார்னர் புரோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.