கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 20 மீனவர்களை இந்திய கடற்படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சோமாலியாவில் கடற்கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அந்நாட்டின் பண்ட்லெண்ட் மாகாணப் பகுதிகளில் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து கடற்கொள்ளையர்கள் அவற்றைக் கைப்பற்றி கொள்ளையடித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மாதம் ஈரானைச் சேர்ந்த மீன்பிடிப் படகு ஒன்றை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அந்தப் படகில் இருந்த 20 மீனவர்களும் அவர்களது பிடியில் சிக்கினர்.
Advertisement
இதையடுத்து, கடத்தப்பட்ட படகு குறித்த தகவல் கிடைத்ததும் இந்தியக் கடற்படையினர் போர்க்கப்பல்கள் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் வழியாக கடற்படையின் கமாண்டோக்கள் கடத்தப்பட்ட மீன்பிடிப் படகில் அதிரடியாக இறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 48 மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையின் முடிவில், படகில் இருந்த 20 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 20 மீனவர்களும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.