தமிழகத்தில் இயக்கப்படும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக, கடந்த ஜூலை 9-ம் தேதி சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பயணியர் தரப்பினர் கலந்து கொண்டு, கட்டண உயர்வு தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் தமிழக அரசு இறுதி அறிக்கையையும் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை மறுசீரமைப்பதற்காக புதிதாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஏற்கனவே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில், திருத்தப்பட்ட புதிய ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ‘பைக் டாக்ஸி’ சேவைக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 19-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த பேரணியில் 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.