சென்னை கொடுங்கையூரில் வீடுகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சென்று கொசு மருந்து தெளித்துள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சுமதி, சுமித்ரா ஆகிய இரு பெண்களுக்கும் நெஞ்செரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட பகுதியில் மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
Advertisement
மேலும், அங்கு மாநகராட்சி ஊழியர்கள் யாரும் பணிக்கு அனுப்பப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறி வந்த மர்ம நபர்கள், மயக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான மருந்து கலந்த புகையைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் நகை மற்றும் பணத்தைத் திருட முயன்றார்களா என்ற கோணத்திலும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.