கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக அமைச்சர் செங்கோட்டையனும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. தவெக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க திமுகவும், அதிமுகவும் இணைந்து முயற்சி செய்ததாக அக்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இந்த அரசியல் விவாதம் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். பின்னர் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தவெக சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதால், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன்பிறகும் எடப்பாடி பழனிசாமியுடன் இணையாமல் தனித்துச் செயல்பட்டு வரும் அவர்கள், மறைமுகமாக தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
Advertisement
இந்தச் சூழலில், கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணியும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதுடன், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற மற்றொரு திருமண விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பங்கேற்றனர். அப்போது இருவரும் நீண்ட நேரம் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.யும் தவெக மாவட்டச் செயலாளருமான மகேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அனைவரும் இணைந்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அதிமுகவில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை செங்கோட்டையன் எடுத்திருந்த நிலையில், தற்போது வேலுமணியுடன் அவர் நடத்திய நீண்ட நேர ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்புகளின் பின்னணியில் வரும் நாட்களில் அதிமுகவில் முக்கியமான அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.