சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் ‘ஏஐ’ தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
சென்னை ஐஐடி மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய மருத்துவர்களுக்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான 3 புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளனர்.உலகளவில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் சிறுநீரக நோய்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது, நோயாளிகளின் மருத்துவ மற்றும் ஆய்வக பரிசோதனைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை கணிக்கும் இயந்திரக் கற்றல் மாதிரி ஆகும்.இரண்டாவது தொழில்நுட்பம், சிடி ஸ்கேன் படங்களை தானாக ஆய்வு செய்து, அவற்றை இயல்பான சிறுநீரகம், சிறுநீரக நீர்க்கட்டி, சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கட்டி என 4 வகைகளாகப் பிரிக்கும் ஆழ்நிலை கற்றல் அமைப்பாகும்.மூன்றாவது, சிடி ஸ்கேன் படங்களைப் பயன்படுத்தி சிறுநீரகத்தின் முப்பரிமாண (3டி) மாதிரியை உருவாக்கும் தொழில்நுட்பம். இதன் மூலம் சிறுநீரகக் கட்டியின் அளவு மற்றும் அது சிறுநீரகத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கணக்கிட முடியும்.சிறுநீரக நோய்கள் ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலும் எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை.