தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை, கல்வி, தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னையில் வசித்து வருபவர்கள், பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. குடும்பத்தினருடனும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் பலர் பயணம் செய்தனர். அதேபோல், சென்னையில் தனியாகத் தங்கிப் பணிபுரியும் இளைஞர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி முடித்துவிட்டு, தற்போது மீண்டும் சென்னைக்குத் திரும்ப மக்கள் தயாராகி வருகின்றனர். இதனால் இன்று மற்றும் நாளை பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இதையடுத்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழக போக்குவரத்துத் துறை கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, வழக்கமாக இயக்கப்படும் 4,382 பேருந்துகளுடன், கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களிலும் மொத்தம் 11,197 பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயும் இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், மானாமதுரையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு தாம்பரத்துக்கு மற்றொரு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.