சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நாளை நடைபெறவுள்ள குழந்தைகள் தின விழாவில், முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று மாணவர்களுடன் கொண்டாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அன்றைய தினம் விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய நாளான நவம்பர் 13-ம் தேதி (நாளை) அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழாவை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேக் விநியோகம் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியை முறையாக நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சம் பேருக்கு கேக் வழங்கப்பட உள்ளது.
Advertisement
ஒவ்வொருவருக்கும் 45 கிராம் எடையிலான கேக் வழங்கப்படுவதுடன், முதல்-அமைச்சர் விஜய்யின் குழந்தைகள் தின வாழ்த்து அட்டையும் அளிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் உள்ள அரசு மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கும் கேக் வழங்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் நேரடியாகத் தொடங்கி வைக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் விஜய், அங்குள்ள குழந்தைகளுக்கு கேக் வழங்கி அவர்களுடன் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.