கேரளாவில் தொடரும் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர்.மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக மாநிலம் முழுவதும் 440 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 41,773 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கேரளாவில் கனமழையின் தாக்கம் இன்றும் நீடித்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.