சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே குடும்பத் தகராறில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்து, அவரது உடலை காட்டுப்பகுதியில் புதைத்ததாக மனைவி, மகன், மாமனார், மைத்துனர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள நெய்யமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (44). கூலி தொழிலாளியான இவரது மனைவி பழனியம்மாள் (40). இவர்களுக்கு முருகன் (21) என்ற மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜுக்கும் பழனியம்மாளுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பழனியம்மாள், மகன் முருகனை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதன் காரணமாக கோவிந்தராஜுக்கும் அவரது மாமனார் மாணிக்கத்திற்கும் (65) தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தராஜ் நாட்டுத் துப்பாக்கியால் மாணிக்கத்தை சுட்டு காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு வாழப்பாடி மங்கம்மா சாலை பகுதியில் தங்கியிருந்து, விஜய் என்பவரது தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாமனார் வீட்டுக்குச் சென்ற கோவிந்தராஜ், மனைவி மற்றும் மகனை மீண்டும் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர்கள் வர மறுத்த நிலையில், கோவிந்தராஜ் தனது மனைவியை தாக்கியதாக தெரிகிறது.
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த பழனியம்மாள், அவரது மகன் முருகன், தந்தை மாணிக்கம் மற்றும் சகோதரர் பெரியசாமி (39) ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவிந்தராஜை தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த 4 பேரும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று கோவிந்தராஜின் உடலை புதைத்துள்ளனர். இதற்கிடையில், சொந்த ஊருக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கோவிந்தராஜ் மீண்டும் வேலைக்கு திரும்பாததால், தோட்ட உரிமையாளர் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 23-ந்தேதி ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் கோவிந்தராஜின் மனைவி வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பழனியம்மாள், முருகன், மாணிக்கம், பெரியசாமி ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவிந்தராஜை தாக்கிக் கொலை செய்து, அவரது உடலை காட்டுக்குள் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் நெய்யமலை வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.