காவிரி நீர் விவகாரம்: தமிழக முதல்வர் விஜய் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தார் – டி.கே. சிவக்குமார்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியதாக தெரிவித்தார். அந்தச் சந்திப்பின்போது, இந்த ஆண்டு நாட்டில் வறட்சி ஏற்படும் சூழல் இருக்கக்கூடும் என்று பிரதமர் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.மேலும், கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால் அவற்றுக்கு அனுமதி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரிடம் கேட்டதாகவும் சிவக்குமார் தெரிவித்தார்.கிருஷ்ணா, தென்பெண்ணை, காவிரி மற்றும் கோதாவரி நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். காவிரி நீர் பிரச்சினை குறித்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் தன்னை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் இரு மாநிலங்களும் பயனடையும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.