காவல்துறையில் காலிப் பணியிடங்கள் இருந்தும், ஆட்சேர்ப்பு தாமதம் ஏன்? - வேல்முருகன்
தமிழ்நாடு காவல்துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்துவது ஏன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையில் சுமார் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காவல்துறைக்கு அனுமதிக்கப்பட்ட 1,34,667 பணியிடங்களில் தற்போது 1,18,851 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதேநேரத்தில், தேர்வுகளை நிறைவு செய்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்கள் பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர். காவல்துறைக்கு பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், தகுதியான இளைஞர்களும் தயாராக உள்ளனர். பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இத்தகைய சூழலில், அவர்களை நியமிக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட 3,644 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இதில் 2,833 இரண்டாம் நிலைக் காவலர்கள், 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பாளர்கள் பணியிடங்கள் அடங்கும். ஆனால், உயரம் அளவீடு மற்றும் தமிழ்வழிக் கல்வி (PSTMS) இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை காரணமாகக் கொண்டு, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அடுத்தகட்ட பணி நியமனங்கள் காலவரையின்றி தாமதமாகி வருவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்குகளை அரசு திறம்படக் கையாண்டு விரைவாகத் தீர்வு காண வேண்டும். வழக்குகள் முடிவடையும் வரை தேர்வர்களின் வயது காத்திருக்காது என்றும், அவர்களின் குடும்பச் சூழல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளும் காத்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஏற்கனவே பணியில் உள்ள காவலர்கள் கூடுதல் பணிச்சுமை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.