தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 16-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. வரும் 25-ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் மாணவர்கள் தேர்வுக்கான வினாத்தாள்களின் விடைகளை எழுதி Assignment-ஆக செய்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தை படிக்கும் வகையில் மாணவர்களுக்கு பாட ஆசிரியர்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. அதேபோல், விடுமுறை நாட்களில் மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக காலாண்டுத் தேர்வு விடுமுறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு அதற்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வுகளை முடித்துள்ள மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஓய்வு எடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.