காசா விவகாரம்: டிரம்ப்பின் 15 அம்ச திட்டத்தை நிராகரித்தது இஸ்ரேல்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்துள்ள காசா அமைதித் திட்டத்தை இஸ்ரேல் ஏற்க மறுத்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறுவதற்கு முன்பாக, ஹமாஸ் தனது ஆயுதங்களை முழுமையாகவும் நிபந்தனையின்றியும் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப் முன்வைத்த 15 அம்ச திட்டத்தில் காசாவில் அமைதியை நிலைநாட்டுவது, ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களை நிராயுதபாணியாக்குவது, இஸ்ரேல் ராணுவத்தை படிப்படியாக வாபஸ் பெறுவது மற்றும் காசாவை மறுகட்டமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்தத் திட்டம், நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான முக்கிய முயற்சி என அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான திட்டத்துக்கு ஹமாஸ் கொள்கையளவில் ஒப்புதல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை கைவிடும் வரை காசாவின் எந்தப் பகுதியிலிருந்தும் இஸ்ரேல் ராணுவம் வெளியேறாது என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை ஒப்படைப்பது மட்டும் போதாது என்றும், ஹமாஸ் முழுமையாக நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மறுபுறம், ஹமாஸ் தனது கனரக ஆயுதங்களை ஒப்படைப்பது என்பது இஸ்ரேல் அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தி, காசாவில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதுடன் தொடர்புடையது என தெரிவித்துள்ளது.டிரம்ப்பின் திட்டம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நெதன்யாகு கூறியுள்ளார். அந்தத் திட்டத்தில் சில யோசனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இருப்பதாகவும், சில அம்சங்களை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால், காசா அமைதித் திட்டம் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. இது காசாவில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.