சென்னை அடுத்த கண்டிகை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் கூறிய முதற்கட்ட விசாரணை விளக்கத்தை ஏற்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வண்டலூர்-கேளம்பாக்கம் பிரதான சாலையில் கண்டிகை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று பள்ளி கழிவறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கவனித்த சக மாணவிகள், பள்ளி ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாணவியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளி வளாகத்துக்குள் மர்ம நபர்கள் சிலர் நுழைந்து, அவரது முகத்தை கைக்குட்டையால் மூடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியிடமும் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
இதற்கிடையில், தேர்வு நடைபெற உள்ளதால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக மாணவி மயங்கி விழுந்திருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படுவதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விளக்கத்தை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்று வண்டலூர்-கேளம்பாக்கம் பிரதான சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் மர்ம நபர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.