கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் நிலவுவதாகக் கூறியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் சாதாரண பெண்களின் பாதுகாப்பை யார் உறுதி செய்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நள்ளிரவு நேரங்களில் தொலைபேசி மூலம் தொந்தரவு செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், மது போதையில் ஆட்சியரின் வீட்டிற்குச் சென்று மிரட்டியதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆட்சியருக்கே இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எந்த அளவுக்கு துணிச்சல் இருந்திருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறும் முதலமைச்சரின் ஆட்சியில், பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பது தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
Advertisement
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்குத் தனியாக ஒரு பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் கவலை அளிக்கிறது. எனவே, முதலமைச்சர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, புகார்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதற்கு வெளிப்படையான மற்றும் எந்தவிதப் பாரபட்சமுமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசும் இந்தப் பிரச்சினையில் தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிகாரத்திலும் அரசியல் பொறுப்பிலும் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவர்கள்தான். ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு, மாநிலத்தின் பிற பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற கேள்வி எழுகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் சார்ந்த விஷயங்களில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. இவ்வாறு பிரேமலதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.