கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் நினைவாக அமைக்கப்பட உள்ள நினைவுச்சின்னத்துக்கு, வருகிற 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அடிக்கல் நாட்டி அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் நிகழ்ந்து வருகிற 27-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஜூலை 10-ந்தேதி விஜய் கரூர் சென்றிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு பணிக்கான பணி ஆணைகளை வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதே நிகழ்ச்சியில் பேசிய விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் நினைவாக வேலுசாமிபுரத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
Advertisement
இதற்கிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் 4 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி, வருகிற 26-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய், அங்கிருந்து 27-ந்தேதி கரூர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் உயிரிழந்த 41 பேரின் ஓராண்டு நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், நினைவுச்சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கரூருக்கு 2-வது முறையாக வருகை தர உள்ளது குறிப்பிடத்தக்கது.