ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில், தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்காகப் பாறாங்கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று, கனமழையால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி நிலைதடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாம்பன் வடக்குப் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காகப் பெரிய பாறாங்கற்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரிகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் லாரிகள் செல்லும் பாதை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை, பாறாங்கற்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாகச் சென்ற டிப்பர் லாரியின் டயர் திடீரென வழுக்கியது.
Advertisement
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கடற்கரையோரச் சரிவில் நழுவி, பாறாங்கற்களுடன் கடலுக்குள் தலைகுப்புறக் கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்த தொழிலாளர்களும் மீனவர்களும் உடனடியாகச் செயல்பட்டு லாரி ஓட்டுநரை மீட்டனர். இதனால் அவர் உயிர் தப்பினார். இதுகுறித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், கடலில் கவிழ்ந்த லாரியை ராட்சத கிரேன் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் கனமழைக்கு மத்தியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.