கடையநல்லூர்: மூதாட்டியிடம் 44 கிராம் தங்க நகைகள் கொள்ளை – 2 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கடையநல்லூர்: மூதாட்டியிடம் 44 கிராம் தங்க நகைகள் கொள்ளை – 2 பேர் கைது

கடையநல்லூர்: மூதாட்டியிடம் 44 கிராம் தங்க நகைகள் கொள்ளை – 2 பேர் கைது

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 73 வயது மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 44 கிராம் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவத்தில், பக்கத்து வீட்டுப் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலக்கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணபதி அம்மாள் (73), தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 11-ந்தேதி இரவு அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.பின்னர் கணபதி அம்மாளை கட்டிப்போட்ட மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி அணிந்திருந்த நகைகளை கழற்றித் தருமாறு கூறியுள்ளனர். அச்சமடைந்த அவர் காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 44 கிராம் தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் ஆய்வாளர் கிறிஸ்டி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.விசாரணையின்போது, அந்தப் பகுதியில் உள்ள தோப்பில் ஆரஞ்சு நிற மோட்டார் சைக்கிள் ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது போலீசாரின் கவனத்துக்கு வந்தது. அதன் உரிமையாளர் அங்கு இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் அந்த மோட்டார் சைக்கிள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கோகுல் கண்ணன் (36) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்ததில், அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை சென்ற போலீசார் கோகுல் கண்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், மூதாட்டியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் வேலம்மாள் (48) என்பவரும், அவரது ஆண் நண்பர் சுரேஷும் இணைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். திருட்டு சம்பவத்துக்கு கோகுல் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்ததுடன், கூட்டாளியாகவும் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து வேலம்மாள் மற்றும் கோகுல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 44 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டு கணபதி அம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மூதாட்டியின் வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.