ஒலிம்பிக்கில் பல விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்பதில்லை: பிரதமர் மோடி கவலை
‘கேலோ இந்தியா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக உரையாடினார்.அப்போது பேசிய அவர், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இந்திய விளையாட்டுத் துறையின் முக்கிய சவால்கள் குறித்து பேசியதாக குறிப்பிட்டார். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்கேற்பு குறைவாக இருப்பது கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்தார்.ஒலிம்பிக்கில் இடம்பெறும் பல்வேறு விளையாட்டுகளில் இந்தியா பாதிக்கும் குறைவான போட்டிகளிலேயே பங்கேற்பதாக பிரதமர் கூறினார். பதக்கப்பட்டியலில் அதிக பங்களிப்பை வழங்கக்கூடிய பல விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் களமிறங்குவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நிலை நீண்ட காலமாக தொடர்வதாக குறிப்பிட்ட பிரதமர், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 13 விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்றதாக தெரிவித்தார். 20-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கவில்லை என்றும், அதே போட்டிகளில் இந்தியாவில் அதிகம் அறியப்படாத நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கூட பங்கேற்று பதக்கங்களை வென்றதாகவும் கூறினார்.ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமானால், தற்போது குறைவாக பங்கேற்கும் விளையாட்டுகளிலும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இதற்கு அலைச்சறுக்கு, மலையேற்றம் போன்ற விளையாட்டுகளை உதாரணமாகக் குறிப்பிட்டார்.இந்தியாவிடம் நீண்ட கடற்கரைப் பகுதிகளும், பரந்த மலைப்பகுதிகளும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நீர்விளையாட்டுகள் முதல் பனிச்சறுக்கு உள்ளிட்ட குளிர்கால விளையாட்டுகள் வரை பல்வேறு போட்டிகளுக்கு தேவையான மனிதவளமும், புவியியல் சூழலும் நாட்டில் இருப்பதாக பிரதமர் கூறினார். இருப்பினும், உலக அளவில் இத்தகைய விளையாட்டுகளில் இந்தியாவின் பங்களிப்பு இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.எனவே, இதுபோன்ற விளையாட்டுகளுக்கான தேவையான சூழலை உருவாக்கி, அதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு இந்தியா தயாராகி வரும் நிலையில், அதில் பங்கேற்கும் தகுதியுடைய வீரர்களை இப்போதே கண்டறிந்து பயிற்சி அளிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.இதன் ஒரு பகுதியாக, 5 முதல் 15 வயதுக்குட்பட்ட திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் மிகப்பெரிய திறன் தேடல் பிரசாரம் குறித்து சுதந்திர தின உரையில் அறிவித்ததாக பிரதமர் தெரிவித்தார்.இளம் வீரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களுக்கு எந்த விளையாட்டு பிடிக்கும் என்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல், எந்த விளையாட்டில் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான திறன் கொண்டவர்கள் என்பதையும் கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.விளையாட்டு வீரர்களுக்கு அரசிடம் இருந்து தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார். 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற நவீன விளையாட்டு சூழலை உருவாக்குவதில் மத்திய அரசு முழு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.