ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. ஒகேனக்கல்லில் அதிகபட்சமாக 14.24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுதவிர, தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், தக்கட்டி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக உயரத் தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.