நடிகர் அஜித்குமாருக்கு சென்னை அருகே உள்ள கோவூரில் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில், அவருக்காக 3,000 சதுர அடி பரப்பளவில் கோவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அஜித் ரசிகர்களை முன்னிறுத்திச் செயல்படும் ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அஜித்குமார், திரைப்படங்களில் நடிப்பதோடு கார் பந்தயங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற பெயரில் தனது சொந்த கார் பந்தய அணியையும் அவர் தொடங்கியுள்ளார். தற்போது ‘டேர் டெவில்’ என்ற திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். இந்தச் சூழலில், சென்னை மாங்காடு அருகேயுள்ள கோவூரில் அஜித்குமாருக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பில் நிறுவப்பட்ட இந்தச் சிலையை, அக்கட்சியின் தலைவர் பாபு திறந்து வைத்தார். கோவூரில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு பாபு தலைமை தாங்கினார்.
Advertisement
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அஜித் ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அதற்குப் பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மேலும், 108 தேங்காய்களை உடைத்தும் தங்களது பக்தியையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். அப்போது, நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, கோவூரில் 3,000 சதுர அடி நிலப்பரப்பில் அஜித்குமாருக்கெனத் தனியாகக் கோவில் கட்டத் திட்டமிட்டுள்ளதாகக் கட்சித் தலைவர் பாபு தெரிவித்துள்ளார். பொதுவாகத் தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் பிறந்தநாள் மற்றும் திரைப்பட வெளியீடுகளைக் கொண்டாடும் ரசிகர்கள், அஜித்குமாருக்கு முழு உருவச் சிலை அமைத்ததுடன், கோவில் கட்டவும் முன்வந்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.