தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. ஒகேனக்கல்லில் அதிகபட்சமாக 14.24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுதவிர, தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், தக்கட்டி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக உயரத் தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரித்ததால், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. காவிரி ஆற்றிலும் செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழக–கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில், காவிரி நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள போடூர்பள்ளம், கோவில்பள்ளம், சறுக்கல் பாறை, முத்தூர் மலை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கிளை ஆறான சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சின்னாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது.