ஏ.ஆர் ரகுமான் மகன் அமீன் சென்ற கார் விபத்து: லேசான காயத்துடன் தப்பினார்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகனும் பாடகருமான ஏ.ஆர்.அமீன் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அமீன், அவரது நண்பர் பார்கவ் மற்றும் கால் டாக்சி ஓட்டுநர் ஆகிய 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஏ.ஆர்.அமீன் தனது நண்பருடன் சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கால் டாக்சி மீது கார் மோதியதாக கூறப்படுகிறது.விபத்தில் காயமடைந்த ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர்.
கால் டாக்சி ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய இரு கார்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஏ.ஆர்.அமீன் தனது தந்தை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் சிறு வயதிலேயே பாடகராக அறிமுகமானார். 2015-ம் ஆண்டு வெளியான ‘ஓகே கண்மணி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மௌலா யா சல்லி வசல்லிம்’ பாடல் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.ஏ.ஆர்.ரகுமானுக்கு கதீஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான் ஆகிய இரண்டு மகள்களும், ஏ.ஆர்.அமீன் என்ற மகனும் உள்ளனர்.