எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா.. மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர்
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தர்மா நாயுடு கல்வி மற்றும் அறக்கட்டளையின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்கள், பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவர்களின் குடும்பத்தினர் என பலர் பங்கேற்றனர். கல்விசார் அணிவகுப்புடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கல்லூரித் தலைவர் டி. துரைசாமி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். முதல்வர் முனைவர் சொ. அன்பழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மொத்தம் 1,065 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். மேலும், பல்கலைக்கழகத் தரவரிசையில் இடம்பெற்ற 11 மாணவர்கள்மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய 22 மாணவர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். விழாவில் பேசிய ஆளுநர், மாணவர்கள் தங்களது புதிய யோசனைகளைத் தொழில்முனைவாக மாற்றுவதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.