ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக ஈரானின் அனுமதியின்றி பயணிக்க முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் கடல் கண்ணிவெடியில் சிக்கி வெடித்துச் சிதறியதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை முன்னெடுத்தது. பல மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்ற இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றம் ஓரளவுக்குக் குறைந்துள்ளது. இருப்பினும், ஈரானை ஒட்டியுள்ள முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்தப் பாதையைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
Advertisement
ஈரானின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கப்பலும் ஹார்மூஸ் ஜலசந்தியைக் கடக்க முடியாது என்று அந்நாடு அறிவித்துள்ளது. அதேவேளையில், இந்தப் பகுதி முழுவதையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டு அதிகாரிகளுடன் எவ்வித ஒருங்கிணைப்பும் மேற்கொள்ளாமல் இரண்டு கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் ரேடார் உள்ளிட்ட கண்காணிப்புக் கருவிகளையும் மீறி அவை பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அனுமதியற்ற கடல் வழிப்பாதையில் ரகசியமாகச் செல்ல முயன்ற அந்த இரண்டு எண்ணெய் கப்பல்களும் வழியிலேயே கடல் கண்ணிவெடியில் சிக்கியதாகவும், அதைத் தொடர்ந்து வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்ததாகவும் ஈரான் கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.