தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.தஞ்சையில் நேற்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவர் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு த.வெ.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அக்கட்சியின் மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது.அந்த புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, இன்று சென்னை போலீஸ் குழுவினர் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.உதயநிதியை கைது செய்ய போலீசார் அவரது இல்லத்துக்கு வந்த தகவல் வெளியாகியதும், தி.மு.க.
Advertisement
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.இந்த கைது விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகும், நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். திருச்சி சிவா, டி.ஆர். பாலு, ஆ. ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.