ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்
ஈரோடு–கரூர் ரெயில் பாதையில் உள்ள பாலங்களில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் சில ரெயில்களின் சேவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 13-ந்தேதி ஆகிய 2 நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, திருச்சி–ஈரோடு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56809) கரூர் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும். இதனால் கரூர் முதல் ஈரோடு வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.ஈரோடு–செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16845) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். எனவே, ஈரோட்டில் இருந்து கரூர் வரையிலான பகுதி சேவை ரத்து செய்யப்படுகிறது.இதேபோல், பாலக்காடு டவுன்–திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16844) பாசூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, பாசூரில் இருந்து திருச்சி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இந்த ரெயில் இயக்கப்படும்.மேலும், கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16322), கோவை முதல் திண்டுக்கல் வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.