ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் 10வது நாளாக தொடர்கிறது
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து மோதலாக மாறியது.இதன் பின்னர், உலகின் முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. மேலும், அந்த வழியாகச் சென்ற கச்சா எண்ணெய் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களையும் மேற்கொண்டது. அதோடு, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள நாடுகளின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கிடையில், ஈரானின் ராணுவ மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு இலக்குகளை குறிவைத்து அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக, ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதல் நீடித்து வருகிறது.இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதல் இன்று 10வது நாளாகவும் தொடர்கிறது. பண்டர் அப்பாஸ், குவாசம் தீவு, சாம்பஹார், கொனர்க் மற்றும் சிரிக் உள்ளிட்ட துறைமுக நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தாக்குதல்களில் உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.