உலகைச் சுற்றிவரும் நீண்டகால கடல் பயணத்தை மேற்கொள்ளும் வகையில், சுமார் 670 சுற்றுலா பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து புறப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் பல்வேறு போக்குவரத்து வழிகளில் பயணம் செய்வதை பெரும்பாலானோர் அனுபவித்திருப்பார்கள். ஆனால், கடல் வழியாக நீண்ட தூரம் பயணம் செய்வது என்பது அனைவருக்கும் கிடைக்கும் அனுபவம் அல்ல. குறிப்பாக, கப்பலில் இருந்தபடி கடற்கரை நகரங்களின் அழகை ரசிப்பது தனித்துவமான அனுபவமாக இருக்கும். இரவு நேரங்களில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் நகரங்களை கடலில் இருந்து பார்ப்பது மேலும் கண்கவர் காட்சியாக அமையும். இத்தகைய நீண்ட கடல் பயணத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு, ‘எக்ஸ்ப்ளோரேஷன்ஸ் பை நார்வேஜியன்’ நிறுவனம் 371 நாட்கள் கொண்ட உலகச் சுற்றுலா பயணத் திட்டத்தை அறிவித்தது. ஓராண்டுக்கும் மேலாக நடைபெறும் இந்தப் பயணத்தில் 6 கண்டங்கள் மற்றும் 62 நாடுகளில் உள்ள 220-க்கும் அதிகமான துறைமுகங்களுக்கு கப்பல் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
ஒவ்வொரு துறைமுகத்திலும் இருந்து முக்கிய சுற்றுலா இடங்களுக்கு வாகனங்கள் மூலம் சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி இத்தாலியின் ரோம் நகரில் இருந்து ‘ரெகாட்டா’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் சுமார் 670 சுற்றுலா பயணிகளுடன் உலகச் சுற்றுப் பயணத்தை தொடங்கியது. இந்த பிரமாண்ட கப்பலில் மொத்தம் 348 ஆடம்பர அறைகள் உள்ளன. அறைகளின் வகை மற்றும் வழங்கப்படும் சொகுசு வசதிகளுக்கு ஏற்ப பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.2 கோடி வரை செல்கிறது. இந்தக் கட்டணத்தில் உணவு, பொழுதுபோக்கு, உலகத் தரத்திலான தங்குமிடம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சுற்றிப் பார்க்கும் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. எனினும், வேகமாக இயங்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், ஓராண்டுக்கும் மேலாக கடல் வழியாக மெதுவாக உலகைச் சுற்றிவரும் இத்தகைய நீண்ட பயணத்தை எத்தனை பேர் விரும்புவார்கள் என்பது கேள்வியாகவே உள்ளது.