இளைஞர்களின் உழைப்பை சுரண்டுவதுதான் பா.ஜ.க.வின் சாதனையா..? - மாணிக்கம் தாகூர் கேள்வி
மத்திய அரசின் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்றும், இளைஞர்களுக்கு உரிய தொழிற்பயிற்சியை வழங்கத் தவறிவிட்டதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே மோடி அரசின் தோல்வியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'Pehli Naukri Pakki' திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஓராண்டு தொழிற்பயிற்சியை சட்டப்பூர்வ உத்தரவாதத்துடன் வழங்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு அப்படியே பின்பற்றியது. ஆனால், அந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், விளம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் (PMIS) தொடக்கத்திலிருந்தே பின்னடைவைச் சந்தித்து வருகிறது. ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக அறிவித்த பா.ஜ.க. அரசின் செயல்பாடு, தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வத் தரவுகள் மூலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. இத்திட்டத்தின் மீதான இளைஞர்களின் ஆர்வம் தொடர்ந்து குறைந்து வருவதையே விண்ணப்பங்களின் எண்ணிக்கை காட்டுகிறது. முதல் சுற்றில் 6.21 லட்சமாக இருந்த விண்ணப்பங்கள், இரண்டாவது சுற்றில் 4.55 லட்சமாகவும், மூன்றாவது சுற்றில் 3.50 லட்சமாகவும் குறைந்துள்ளன. நிறுவனங்கள் அறிவித்த பயிற்சி வாய்ப்புகளில் 10 சதவீதத்தைக்கூட நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றில் 1,27,508 வாய்ப்புகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 8,760 பேர் மட்டுமே பயிற்சியில் சேர்ந்தனர். இதன் மூலம் சேர்க்கை விகிதம் 6.9 சதவீதமாக இருந்தது. இரண்டாவது சுற்றில் 1,18,948 வாய்ப்புகளுக்கு 7,308 பேர் மட்டுமே சேர்ந்தனர். அப்போது சேர்க்கை விகிதம் 6.1 சதவீதமாகச் சரிந்தது. மூன்றாவது சுற்றில் விதிகள் தளர்த்தப்பட்டபோதும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. மொத்தம் 1,54,366 வாய்ப்புகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 14,620 பேர் மட்டுமே பயிற்சியில் இணைந்தனர். இது 9.5 சதவீதமாகும். மேலும், 1.54 லட்சம் வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், 25,794 பேருக்கு மட்டுமே பயிற்சிக்கான சலுகைகள் வழங்கப்பட்டதாக மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார். பயிற்சியில் இணைந்தவர்களிலும் கணிசமானோர் அதை முழுமையாக முடிக்கவில்லை. முதல் சுற்றில் சேர்ந்த 8,760 பேரில் 3,731 பேர் மட்டுமே பயிற்சியை நிறைவு செய்தனர். இது 42.6 சதவீதமாகும். இரண்டாவது சுற்றில் பயிற்சியில் இணைந்த 7,308 பேரில் 2,880 பேர் மட்டுமே நிறைவு செய்துள்ளனர். இவர்களின் விகிதம் 39.4 சதவீதம்.