இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தியை முந்திய முதல்-அமைச்சர் விஜய்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, சமூக வலைதளங்களில் முதல்-அமைச்சர் விஜய்க்கான வரவேற்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக உள்ளது. இதில் பலர் தங்களது திறமைகளை வீடியோக்கள் மற்றும் பதிவுகள் மூலம் வெளிப்படுத்துவதோடு, அதிகமான பின்தொடர்பவர்களை பெற்று வருமானமும் ஈட்டி வருகின்றனர்.இதனுடன், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களையும் இளைஞர்கள் அதிகளவில் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடியை உலகம் முழுவதும் 10.2 கோடி பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை 3.22 கோடி பேரும், மத்திய மந்திரி நிதின் கட்கரியை 66 லட்சம் பேரும் பின்தொடர்ந்து வருகின்றனர்.எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை 1.47 கோடி பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் அந்த எண்ணிக்கையை முந்தியுள்ளார். தற்போது விஜய்யின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை தலா 40 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.