இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்திலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்திலும் வளிமண்டல சுழற்சிகள் நிலவி வருகின்றன. இன்றைய வானிலை (11-11-2026): சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடி, மின்னலுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். நாளைய வானிலை (12-11-2026): தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசி மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (13-11-2026) கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 14-11-2026: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.