இந்திய வர்த்தக சபை பிரதிநிதிகள் இலங்கை பயணம்; வணிக கூட்டணிகள் குறித்து ஆய்வு
வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயும் நோக்கில், இந்திய வர்த்தக சபையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு விரைவில் இலங்கைக்கு செல்ல உள்ளதாக சிலோன் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.இந்த பிரதிநிதிகள் குழுவில் உற்பத்தி, கட்டுமானம், பொறியியல், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம், மருந்துத் தயாரிப்பு, நீர் சுத்திகரிப்பு, தொழில்துறை கனிமங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.மேலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள், விவசாயம், சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், பீர், சாராயம் மற்றும் ஒயின் உற்பத்தி, ஏற்றுமதி, குடியேற்ற சேவைகள், நுண்கலை மற்றும் பாரம்பரியத் துறை, விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இணைந்துள்ளனர்.இந்தியா மற்றும் சிலோன் வர்த்தக சபைகளின் உறுப்பினர்கள் பங்கேற்கும் அறிமுக மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.