ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உழைப்புக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவும் கருவிகளைப் போற்றி வழிபடும் ஆயுத பூஜையும், கல்வி மற்றும் கலை சார்ந்த பணிகளைத் தொடங்குவதற்கு சிறப்பான நாளாகக் கருதப்படும் சரஸ்வதி பூஜையும் இன்றும் நாளையும் நடைபெறுகின்றன. இவ்விழாக்களைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பையும் தொழிலையும் மதிப்பதுடன், அவற்றுக்குத் துணையாக இருக்கும் கருவிகளுக்கு நன்றியை வெளிப்படுத்துவதும் தமிழர்களின் சிறப்பான பண்பாகும்.
Advertisement
அதேபோன்று, கல்வி என்பது எவராலும் பறிக்க முடியாத செல்வம் என்றும், அது வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும் என்றும் தமிழக மக்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த வேளையில், தமிழகத்தில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் அனைவரும் சிறந்து விளங்க வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.