ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.78.29 லட்சம் வசூல்
கோவை மாவட்டம் ஆனைமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக்கடன்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கோவிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 9 தட்டுக்காணிக்கை உண்டியல்கள் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கைகள் முறையாக எண்ணப்பட்டன.இந்த பணியை கோவில் தக்கார் ராஜ்குமார், துணை ஆணையர் சுவாமிநாதன், சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் விமலா, ஆனைமலை சரக ஆய்வாளர் சித்ரா, கோவில் கண்காணிப்பாளர்கள் சீனிவாசன் மற்றும் நிர்மலாதேவி ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.உண்டியல் எண்ணிக்கையின் முடிவில், ரூ.78 லட்சத்து 29 ஆயிரத்து 51 ரொக்கப் பணம் கிடைத்தது.
மேலும், 77 கிராம் தங்கம் மற்றும் 139 கிராம் வெள்ளியும் காணிக்கையாக இருந்தது.காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்களுடன் சலவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.