அமெரிக்க ராணுவ செலவுக்கு ரூ.111 லட்சம் கோடி ஒதுக்கீடு; பிரதிநிதிகள் சபை ஒப்புதல்
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலால் அமெரிக்காவுக்கு நாளொன்றுக்கு சராசரியாக ரூ.8 ஆயிரம் கோடி வரை செலவாகியுள்ளதாகவும், இதுவரை மொத்த செலவு ரூ.3 லட்சம் கோடியை கடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களின் இருப்பும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்தின் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ரூ.111 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதாவுக்கு, அந்நாட்டு கீழ்சபையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்த மசோதாவில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் முக்கிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.