Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

அன்பில் மகேஷ் தப்பிச் செல்ல மாட்டார்; ஜாமின் வழங்க வேண்டும் – வழக்கறிஞர் வாதம்

அன்பில் மகேஷ் தப்பிச் செல்ல மாட்டார்; ஜாமின் வழங்க வேண்டும் – வழக்கறிஞர் வாதம்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 2-ம் தேதி முதல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்தினர். போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அமைதியாகப் பதிலளித்ததாகவும், எந்தவித நெருக்கடியும் அளிக்காமல் போலீசார் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 3 நாள் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போலீசார் தன்னைத் துன்புறுத்தினார்களா என்றும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட்டனவா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ், போலீசார் தன்னைத் துன்புறுத்தவில்லை என்றும், உணவு உள்ளிட்ட வசதிகள் முறையாகக் கிடைத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் மனுவில் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள் இந்த நிலையில், அன்பில் மகேஷின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள்: கைது செய்யப்படுவதற்கு முன்பே மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுப்பிய சம்மனை ஏற்று அன்பில் மகேஷ் ஆஜரானார். அப்போது 8 மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தார். அதேபோல், 3 நாள் போலீஸ் காவலிலும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளார். வழக்கின் புலனாய்வுக்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement
இந்த வழக்கில் முதலில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தொகை ரூ.800 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசகுமார் என்பவர்தான் ரூ.100 கோடி வசூலித்துள்ளார். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறி அவர் பணம் பெற்றுள்ளார். அரசகுமார் பணம் வசூலித்தது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை போலீசார் தற்போது மாற்றியுள்ளனர். ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கும் நிலையில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டிய பள்ளி அங்கீகாரத்தை 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் கையெழுத்திட்டவர் அரசு கூடுதல் செயலாளர்; அன்பில் மகேஷ் அல்ல. 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் வழங்குவது என்பது பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இணைந்து எடுத்த முடிவாகும். அதற்கான அரசாணையும் பல்வேறு அதிகாரிகளின் பரிசீலனைகளைக் கடந்தே வெளியிடப்பட்டது. அரசகுமார் தவறான தகவல்களை அளித்திருந்தால் அதற்கு அன்பில் மகேஷ் எவ்வாறு பொறுப்பாக முடியும்? அரசகுமாருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறியவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டவர்களை போலீசார் ஏன் கைது செய்யவில்லை? அரசகுமார் செய்ததாகக் கூறப்படும் தவறுக்கு அன்பில் மகேஷை ஏன் பொறுப்பாக்க வேண்டும்? லஞ்சம் கொடுத்ததாகக் கூறுபவர்களைச் சாட்சிகளாக மாற்றியுள்ளனர். அன்பில் மகேஷ் செல்வாக்கு மிக்கவர் என போலீசார் கூறினாலும், அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். மேலும், வழக்கின் ஆதாரங்களைக் கலைக்கும் செயலிலும் அவர் ஈடுபட மாட்டார். எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் வாதிட்டார். ஜாமின் கிடைக்குமா? அன்பில் மகேஷின் ஜாமின் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தின் விசாரணை முடிவில் அவருக்கு ஜாமின் வழங்கப்படுமா அல்லது மீண்டும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுமா என்பது தெரியவரும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு