திருவண்ணாமலையில் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, பக்தர்கள் தீப மலையில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆன்மிகச் சிறப்புமிக்க தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்கவும், மகா தீபத்தை தரிசிக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அக்னி ஸ்தலமாக போற்றப்படும் இக்கோவிலில் தீபத் திருவிழாவையொட்டி வழக்கமாக பக்தர்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவது வழக்கம். இருப்பினும், அண்ணாமலையார் மலையில் ஏறுவதற்குப் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டு பக்தர்களின் நலன் கருதி மலை ஏற அனுமதி வழங்கப்படவில்லை.
Advertisement
இந்நிலையில், நடப்பாண்டு வரும் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இந்த ஆண்டும் பக்தர்கள் மலை மீது ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், தீபத் தினத்தன்று பக்தர்கள் தீப மலைக்குச் சென்று மகா தீபத்தை நேரில் தரிசிக்க அனுமதி இல்லை.