அதிகாரத்தை வெளிப்படுத்த வேண்டாம்... பொதுமக்கள் நலனே முதன்மை
வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை பொதுமக்கள் தேவையில்லாமல் அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்படாத வகையில் செயல்பட்டு, அவர்களின் நலனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.மும்பை நாரிமன் பாயிண்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வருமானவரித்துறையின் 13 மாடிக் கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தக் கட்டிடத்திற்கான அனுமதிகளைப் பெற வருமானவரித்துறை அதிகாரிகளே பல்வேறு துறைகளை அணுகி அலைந்ததாக குறிப்பிட்டார். அதிகாரமும் வலிமையும் கொண்ட ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருந்தால், அலுவலகங்களை நாடி வரும் சாதாரண மக்களின் சிரமத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்றார்.எனவே, அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களை தேவையற்ற முறையில் அலைக்கழிக்கக் கூடாது என்றும், விதிமுறைகளை மீற வேண்டும் என்று தாம் கூறவில்லை; ஆனால் சட்ட வரம்புக்குள் இருந்து மக்களுக்கு உதவக்கூடிய அணுகுமுறையை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.