அடேங்கப்பா... 8 அடி 10 அங்குலம் நீளமுள்ள தலைமுடி! கின்னஸ் சாதனை படைத்த இந்தியப் பெண்
தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தரியல், தனது தலைமுடியின் நீளத்தால் உலக சாதனை படைத்துள்ளார். அவரது தலைமுடி 8 அடி 10 அங்குலம், அதாவது 271.50 செ.மீ. நீளமாக இருப்பது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்பு உக்ரைனைச் சேர்ந்த அலீயா நசிரோவா, 8 அடி 5.3 அங்குலம் நீளமுள்ள தலைமுடியுடன் சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை ரேணு தரியல் முறியடித்துள்ளார்.உலகின் மிக உயரமான மனிதராக அறியப்பட்ட ராபர்ட் வாட்லோவின் உயரம் 8 அடி 11.1 அங்குலம். இதற்கு சற்றே குறைவான அளவிலேயே ரேணு தரியலின் தலைமுடி நீளமாக உள்ளது. அவரது தலைமுடியின் நீளம் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அளவிடப்பட்டு, சாதனை உறுதி செய்யப்பட்டது.யூடியூபராகவும் செயல்பட்டு வரும் ரேணு தரியல், தனது நீளமான தலைமுடியைப் பராமரிக்கும் முறைகள் குறித்தும் வெளிப்படையாகப் பகிர்ந்து வருகிறார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தலைமுடியை வளர்த்து வருவதாகவும், அதன்பிறகு ஒருமுறைகூட முடியை வெட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய கலாசாரத்தில் நீண்ட தலைமுடி அழகு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படுவது, தலைமுடியை நீளமாக வளர்க்க தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.இவ்வளவு நீளமான தலைமுடியைப் பராமரிப்பதற்கு அதிக பொறுமை தேவைப்படுவதாக ரேணு தரியல் தெரிவித்துள்ளார். தலைமுடியைக் கழுவுவது, சிக்கல்களை அகற்றுவது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளுக்காக பல மணி நேரங்களை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ரசாயனப் பொருட்கள் கலந்த தயாரிப்புகளைத் தவிர்த்து, இயற்கையான முறைகளையே பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரசாயனங்கள் இல்லாமல் வீட்டிலேயே தயாரிக்கப்படும் தலைமுடி எண்ணெய் மற்றும் ஷாம்பு தொடர்பான தகவல்களையும் தனது யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்து வருகிறார்.