செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பயணித்த காரின் பதிவெண் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருமாவளவன் சென்ற டெஸ்லா காரின் பதிவெண் ‘TN 07 CM 2031’என்பதாக இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, 2031-ம் ஆண்டு திருமாவளவன் தமிழக முதல்-அமைச்சர் ஆவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும், அப்போது திருமாவளவனை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவலை திருமாவளவன் மறுத்திருந்தார். இதற்கிடையே, தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதல் முறையாக இடம்பெற்றுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த வன்னியரசு அமைச்சராக உள்ளார். இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும், அடுத்த தேர்தலில் அந்தக் கட்சிக்கு முக்கியமான எதிர்காலம் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Advertisement
மேலும், அடுத்த தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சி அமைப்பதைத் தீர்மானிக்கும் வகையில் அமையும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான், திருமாவளவன் பயணித்த காரின் ‘TN 07 CM 2031’ பதிவெண்ணையும் சுட்டிக்காட்டி, 2031-ல் அவர் தமிழக முதல்-அமைச்சராக வருவார் என அக்கட்சியினர் பேசி வருகின்றனர். இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு வெளியான ‘தி கோட்’ திரைப்படத்துடன் தொடர்புடைய ஒரு காரின் பதிவெண்ணையும் அவர்கள் உதாரணமாகக் குறிப்பிடுகின்றனர். அப்போது விஜய் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட காரின் பதிவெண் ‘TN 07 CM 2026’ என இருந்ததாகவும், அதன் பின்னர் அவர் முதல்-அமைச்சராகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், திருமாவளவனின் கார் பதிவெண்ணும் தற்போது தேர்தல் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளுடன் இணைத்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.