Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

9-ந் தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனை: கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்குமா?

9-ந் தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனை: கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்குமா?

தமிழக அரசியலில் புதிய கூட்டணி அமைப்பு தொடர்பான ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், த.வெ.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் 2-வது ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பை கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு த.வெ.க. நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தல் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. தி.மு.க.வின் எதிர்பார்ப்புக்கு மாறாக தேர்தல் முடிவு அமைந்த நிலையில், கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே த.வெ.க. ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை, அ.தி.மு.க.வுக்கும் தேர்தல் முடிவு பின்னடைவை ஏற்படுத்தியது.மேலும், தேர்தலுக்கு முன்பு ஒரு அணியில் இருந்த சில கட்சிகள், தேர்தலுக்குப் பிறகு வேறு அணிக்கு மாறியதும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தன.இந்த ஆதரவை தற்போதைய ஆட்சிக்கான ஏற்பாடாக மட்டும் பார்க்காமல், எதிர்கால தேர்தல்களையும் இணைந்து எதிர்கொள்ளும் அரசியல் கூட்டணியாக வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 1-ந் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆனால், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டணிக்கு பொதுவான பெயர் வைப்பது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது, குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.இந்த நிலையில், த.வெ.க. மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்தித்தனர்.சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்களுக்கு சென்ற அவர்கள், அந்த கட்சிகளின் மாநில செயலாளர்களான வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.பின்னர் சென்னை அண்ணாநகரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்தார். வைகோவை சந்தித்த பிறகு அவர் கூறுகையில், முதல்-அமைச்சருக்கு ஆதரவாக இருக்கும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், வரும் 9-ந் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement
அந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜயும் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார்.இதையடுத்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் சார்பில் தமக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்வோம் என்றும் தெரிவித்தார்.இதனால், வரும் 9-ந் தேதி நடைபெற உள்ள த.வெ.க. ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடு என்ன? முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்காத நிலையில், வரும் 9-ந் தேதி நடைபெறும் 2-வது கூட்டத்தில் அக்கட்சி கலந்து கொள்ளுமா என்று மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற இருப்பதாகவும், அதன் பின்னர் நிர்வாகிகள், செயற்குழு மற்றும் மாநிலக்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர்கள் தெரிவித்த முதல்-அமைச்சரின் கருத்துகள் குறித்தும் அந்த கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்றும், அதன் பின்னர் தங்களது நிலைப்பாடு குறித்து ஊடகங்களுக்கு தெரிவிப்போம் என்றும் கூறினார். மேலும், மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து த.வெ.க.வுக்கு இடதுசாரிகள் ஆதரவு அளித்ததாக அவர் விளக்கினார். அதே நேரத்தில், கவர்னர் மக்கள் அதிகாரத்தில் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.தாங்கள் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை என்றும், வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக எந்த சமரசமும் இல்லாமல் குரல் கொடுத்து வருவதாகவும் வீரபாண்டியன் கூறினார்.அரசு மக்கள் நலனுக்கான நல்ல திட்டங்களையும் சரியான அரசியல் பாதையையும் முன்னெடுத்துச் செல்லும் போது ஆதரவு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். முதல் கூட்டம் விருந்து நிகழ்வாக மட்டுமே இருந்ததாகவும், அப்போது கூட்டணி தொடர்பாக பேசியது தங்களது உடன்பாடு அல்ல என்றும் வீரபாண்டியன் கூறினார். தாங்கள் கலந்து கொண்டால் அந்த கூட்டணியில் இடம்பெற வேண்டிய சூழல் உருவாகும் என்பதால், விருந்தின் தன்மை மாறிவிடக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சரிடம் தெரிவித்து அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.தற்போது கூட்டணி தொடர்பாக அழைப்பு வந்துள்ள நிலையில், அதுகுறித்து தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது என்றும், கட்சிதான் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு