தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பால் விலை கடந்த 8 மாதங்களில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தி சந்தையில் அதன் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது. 3 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட நீல உறை பாலின் அரை லிட்டர் பாக்கெட் ரூ.31-ல் இருந்து ரூ.32 ஆகவும், 4.5 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், 6 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட ஆரஞ்சு உறை பால் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ள மூன்றாவது பால் விலை உயர்வு இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் 8 மாதங்களில் மட்டும் மூன்று முறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மட்டும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரண்டு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவினில் 3 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட நீல உறை பால் லிட்டர் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களின் விலை ரூ.24 அதிகமாக உள்ளது. இதேபோல், ஆவினில் ரூ.44-க்கு விற்கப்படும் 4.5 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால், தனியார் நிறுவனங்களில் ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
6 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பால் லிட்டர் ரூ.60-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் அதே வகை பாலை ரூ.84-க்கு விற்பனை செய்கின்றன. தமிழ்நாட்டின் பால் சந்தையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதே, அவர்கள் தொடர்ந்து விலையை உயர்த்துவதற்கு காரணம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டு நிலவரப்படி தமிழக பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு 16 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது அது சுமார் 12 சதவீதமாக குறைந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆவின் குறைந்த விலையில் பால் விற்பனை செய்தாலும், அதன் விநியோக திறன் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே இருப்பதால் பெரிய அளவில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும், தனியார் நிறுவனங்கள் 84 முதல் 88 சதவீதம் வரையிலான சந்தைப் பங்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக செயல்படும் வகையில் ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தி, தமிழக பால் சந்தையில் 50 சதவீத பங்களிப்பை பெறும் அளவுக்கு வளர்க்க வேண்டும். அப்போதுதான் தனியார் பால் விலையை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிர் அளிப்பதுடன், தனியார் பால் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.