5 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 21) முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.மற்ற தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழைக்கு வாய்ப்பு ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.ஆகஸ்ட் 26 மற்றும் 27-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மற்ற தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது ஆகஸ்ட் 21 முதல் 23-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், உள் தமிழகப் பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகரிக்கலாம்.இந்த நாட்களில் உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும்.ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானிலை எப்படி? இன்று மற்றும் நாளை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.