40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம்; சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் உரையாற்றினார். சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.உரையின்போது பேசிய பிரதமர் மோடி, இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றும், நாட்டின் விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் தங்கள் உயிரை அர்ப்பணித்ததாகவும் குறிப்பிட்டார். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இந்தியா இன்று 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருவதாக அவர் தெரிவித்தார்.மேலும், 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருவதாகவும், செங்கோட்டையில் அந்தப் பாடல் முதன்முறையாக ஒலிப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வந்தே மாதரம் எதிரொலிப்பதாகவும், ஒவ்வொருவரின் மனதிலும் தேசியக் கொடியின் மூவர்ணம் நிறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தின் திருப்பூர் ஜவுளித் துறையைப் பற்றியும் தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியா தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.சர்வதேச சந்தையில் உரங்களின் விலை உயர்ந்திருந்தாலும், இந்திய விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு இணையான பணிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும், இந்தியா புதிய உயரத்தை எட்டும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.