35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்: ஆர்ஜே பாலாஜி வலியுறுத்தல்
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார். ரேடியோ ஜாக்கி, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் உள்ளிட்ட பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ள ஆர்ஜே பாலாஜி, உடல்நலம் தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்தார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், நடிகர் சூர்யாவின் முக்கியமான கம்பேக் படமாகவும் அமைந்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, "30–35 வயதைக் கடந்த பிறகு நான் ஆண்டுதோறும் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்து வருகிறேன். 35 அல்லது 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.மேலும், அரசு மருத்துவத் திட்டங்கள் மற்றும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் சுகாதார பரிசோதனை திட்டங்கள் மூலம் பொதுமக்களும் முழு உடல் பரிசோதனையை எளிதாக மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.குடும்பத்தில் உள்ள பெண்கள் உட்பட அனைவரும் உடல்நலத்தில் அக்கறையுடன் இருந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.ஆரோக்கியம் தொடர்பாக ஆர்ஜே பாலாஜி பகிர்ந்த இந்த விழிப்புணர்வு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளன.