2-வது தகுதி சுற்று: திருச்சியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை
டிஎன்பிஎல் தொடரின் 2-வது தகுதி சுற்றுப் போட்டியில் திருச்சி அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.முதலில் களமிறங்கிய கோவை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் அணிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தினர். தொடர்ந்து வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக இன்னிங்ஸின் இறுதி கட்டத்தில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என கோவை அணியின் ரன் வேகம் அதிகரித்தது.இதையடுத்து 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திருச்சி அணி களமிறங்கியது.
ஆனால் தொடக்கம் முதலே அந்த அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் ஜெயராமன் மட்டும் 48 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இதனால் திருச்சி அணி 15.4 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோவை அணியின் மணிமாறன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இறுதியில் திருச்சியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை கிங்ஸ் அணி, 2-வது தகுதி சுற்றில் வெற்றியைப் பதிவு செய்தது.