நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், தனது மனைவி அன்னா கொனிடேலாவை பிரிவதாக அறிவித்துள்ளார். 13 ஆண்டுகளாக நீடித்த இவர்களது திருமண உறவு முடிவுக்கு வருவதாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில், வாழ்க்கையின் முக்கியமான பல தருணங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொண்ட தாங்கள், தற்போது பரஸ்பர புரிதலுடனும் மரியாதையுடனும் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். திருமண உறவு முடிவடைந்தாலும், தொடர்ந்து நண்பர்களாகவும், குழந்தைகள் மீது அக்கறை கொண்ட பெற்றோர்களாகவும் இருப்போம் என தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தைகளின் மகிழ்ச்சி மற்றும் நலனே இருவருக்கும் முதன்மையானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்தச் சூழலில் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு உரிய மதிப்பளிக்குமாறும், இந்த முடிவை புரிதலுடனும் அன்புடனும் அணுகுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Advertisement
இதுவரை தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். பவன் கல்யாணும், ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா லெஷ்னேவாவும் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'தீன் மார்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சந்தித்துக்கொண்டனர். இந்த அறிமுகம் காதலாக மாறியதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பவன் கல்யாணுக்கு, அன்னா கொனிடேலாவுடனான பிரிவின் மூலம் மூன்றாவது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.